Monday, July 5, 2010

மாலவன் அந்தாதி

வாணி துதி
கல்லாசனத்தில் வீற்றிருந்து காலத்தால் அழியா
கல்வி செல்வம் தந்தருளும் கலைவாணியே
பரமனின் புகழ் பாடும் இந்நூல் பக்தர்களின்
நாவில் என்றும் நடமிட வரமருள்வாயே

ஆனைமுகன் துதி
ஆனைமுகனே உந்தன் ஆதரவின்றி
யாது நிகழும் இவ்வுலகில் என்பதை
அறிந்தே யான் எப்போதும் உன்னை
என் சிந்தையில் வைத்து வணங்குகிறேன்
மாலவன் அந்தாதி

நூலின் நோக்கம்
பக்தியோடு பாராயணம் செய்வீர் பரமனின்
புகழ் பாடும் இந்நூலை குறையொன்றுமில்லா
கோவிந்தனை நினைவில் கொண்டேயன்றி
நூலில் குறை காண்பதை விடுத்து

பக்தனின் இலக்கணம்
தலைக்கனமின்றி எல்லா உயிர்க்கும் பணிவோடு
சேவை செய்தே தன்னிடம் உள்ளதனைத்தையும்
அனைவரோடும் பகிர்ந்துகொண்டு எந்நேரமும்
இறைவனையே நினைந்து அவருக்காகவே வாழ்பவன்

ஹயக்ரீவன் துதி
அவனியில் பிறந்த அனைவரும் துன்பம்
நீங்கி இன்புற்று வாழவே ஹரியின் புகழ் பாடும்
இந்நூலை செய்திட்டான் ஞானமும் ஆனந்தமும் ஒருங்கேயாகிய
ஹயக்ரீவ பெருமான் என்னை தன கருவியாக்கி

வாணிக்கருள் செய்த ஹயக்ரீவா
நீரில் நில்லாதோடும் மீன்கள் போல்
அல்லாது என் மனதினை உன் திருவடியில்
நிலை நிறுத்திடுவாய் ஏதும் கல்லாமலே
நாரத பகவான் துதி
பக்திக்கு இலக்கணம் வகுத்த நாரத
பகவான் திருவடி வணங்கியே இந்நூலை
ஓதுவோர் அன்புருவான ஹரியை அறியும்
அருளினை பெறுவோர் எளிதாக
கருவிலிருக்கும்போதே திருவடிவான
திருமகள் நாயகன் நாராயணனின்
திருமந்திரத்தினை பிரகலாதனுக்களித்த
நாரத பகவானை வணங்கிடுவோம்
மாலவன் அந்தாதி
1.எதையுமே அறியாதவன் யாதவ
திலகமாகிய கண்ணனிடம் பக்தி
செய்தால் போதும் எளிதாக அருளை
பெற்றிடுவான் பரமாத்மாவாகிய கண்ணனிடம்
2.அவனிடம் பக்திகொண்டு எப்போதும்
அவன் நினைவில் வாழ்பவர்கள் மீண்டும்
இவ்வுலகில் பிறந்து உழன்று முடிவில்
அடைய வேண்டாம் மரணத்தை
3.மரணத்தை நினைத்து வீணே
கலங்குதல் வேண்டா .மனம் தளராமல்
ஒவ்வொரு கணமும் பக்தியுடன்
பாடு பகவானின் நாமங்கள் ஆயிரம்
4.ஆயிரம் தலை கொண்ட ஆதிசேடன்
குடை பிடிக்க சிறையில் அவதரித்து
அடியவர்களை காக்க வந்த கண்ணனின்
புகழை பாடுவதுதான் பக்தனுக்கழகு

5.அழகுத் தெய்வமாம் கண்ணன் தன்னை
நினைப்போருக்கு அருள் செய்ய காத்திருக்க
அவனை விடுத்து மனமே நீ ஏன்
நாடுகிறாய் பொன்னும் பொருளும்
6.பொன்னும் பொருளும் வேண்டா
நனவிலும் நினைவிலும் கண்ணனையே
காணும் கோபிகைகளைப்போல் அவனையே
நினைந்து பக்தி செய்பவர்களுக்கு
7.பக்தி செய்பவர்களுக்கு பரமபதத்தையே
தந்தருள காத்திருக்கும் பரந்தாமனை
சிந்தனை செய்யாமல் காலம் கடத்துவோர்
காலனுக்கி இரையாகி காணாமல் போவார்.
8.போவார் பல நாடுகள் பொன் பொருள் தேடி
தொலைப்பார் பெரும்பகுதி தன வாழ்வில்
உயிருக்குயிராய் விளங்கும் அந்த உத்தமனை
சிந்தனை செய்யார் ஒரு போதும்
9.போதும் இவ்வுலக மாயையில் சிக்கி உழன்றது
கோகுலத்தில் மாடு கன்று மேய்த்து கல்வி அறிவில்லா
இடையரையும் ஆட்கொண்ட மணிவண்ணனை
நினைப்பவர் மாயையில் சிக்கார் ஒரு போதும்
10.ஒருபோதும் வாரா நம்முடன் இவ்வுலகில்
உள்ளவை எவையும் மறலி நம் உயிரைப்
பறிக்கும் முன்பே நாடுங்கள் பிரம்மனும்
ஆராதித்த பேரருளாளனின் திருவடிகளை
11.திருவடிகளை நமக்கு காட்டவல்ல
பெரிய திருவடியாம் கருடனையும்
சிறிய திருவடியாம் அஞ்சனை மைந்தனையும்
பக்தி செய்தால் போதும் தோன்றும் வழி
12.வழி காட்ட கருணை உள்ளத்துடன்
பரமனிடமிருந்து வந்தவர்களே
இறை அடியார்கள் அவர்கள் காட்டும்
பாதையை நாடி நலம் பெறுவீர்
13.பெறுவீர் பெரும்பேறு திருபெரும்புதூர்
வள்ளல் ஸ்ரீராமானுஜன் திருவடியை வணங்கி
எல்லோரும் உய்ய நாராயண மந்திரத்தை
உபதேசித்த அந்த கருணை தெய்வத்தை
14.தெய்வத்தை இகழும் அறிவிலிகள்
தாமரையில் தேனிருக்க அதை பருகாமல்
பருகவந்து பூ மேல் அமரும் வண்டுகளை
பிடித்து தின்னும் தவளைகளன்ரோ
No comments:

Post a Comment